திருநெல்வேலி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.
Updated on
2 min read

திருநெல்வேலி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் சனிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியார் பேராலயத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியின் முடிவில் கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தென்னிந்திய திருச்சபை சார்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரணை நடைபெற்றது. பிரார்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன.

இதேபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம் ஆகியவற்றிலும் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

மேலப்பாளையம் சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் மரவிழா மற்றும் ஞாயிறு பள்ளி மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மரவிழா பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com