மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின்

மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின்

மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அதுதான் என் இலட்சியம்.
அரசின் நலத் திட்டங்கள் - சேவைகள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைந்தாக வேண்டும். அரசிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம்
நிறைவேறும் என்ற நம்பிக்கையை, ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான மனுக்கள் மீது நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றால் மீண்டும், மீண்டும் மனுக்களை மக்களிடம் இருந்து பெறக்கூடிய
நிலையைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
இப்போது உறுதியாகச் சொல்கிறேன், இத்தகைய சுழற்சி முறையை எப்போதும் நாங்கள் நிறுத்த மாட்டோம். சிலர் நினைக்கலாம், இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் - ஆரம்பத்தில் இப்படித்தான் - கல்யாண ஜோர் - புது மாப்பிள்ளை என்று நினைப்பார்கள். உறுதியாகச் சொல்கிறேன், நாங்கள் எப்போதும் இப்படித்தான் இருப்போம். எந்த நிலையிலும் இதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

இந்த ஆறு மாத காலத்தில் ஏராளமான புதிய தொழில்களை உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான
இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறப் போகிறார்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்கை எட்ட இருக்கிறது.
வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னோம். அதை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே மெய்ப்பித்துக்காட்டியிருக்கிறோம். வேளாண்மைத் துறைக்கு என்று தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பைக்கொடுத்து மகசூலை அதிகரிக்க உதவிகள் செய்து வருகிறோம்! கிராமப்புறத் திட்டங்கள் அனைத்தையும் புதுப்பித்து நிதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறோம்!
புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன! மக்களைத் தேடி மருத்துவம் முதல் அதிநவீன மருத்துவமனைகள் வரை எத்தனையோ திட்டமிடுதல்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன! நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், பாலங்கள் அறிவிக்கப்பட்டுப் பணிகள்
நடக்கத் தொடங்கி இருக்கிறது!
தொழில் வளர்ச்சிக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும், பெண்களுக்கான மேம்பாட்டுக்கும் தரத்
தொடங்கி இருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் திருச்சியில் தேர்தலுக்கு முன்பு நான் வழங்கிய ஏழு உறுதிமொழிகளையும் எடுத்து வைத்துக் கொண்டு, நான் செயல்படுத்தத் தொடங்கி விட்டேன். இதை திருச்சி மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் நான் விரும்புகிறேன்.
நம்மால் முடியும்! நம்மால் மட்டும்தான் முடியும்! என்று நான் அப்போதே குறிப்பிட்டேன். அந்த நம்பிக்கை தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது
எனக்கு அதிகமாக வந்துவிட்டது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை
கொடுத்துச் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். ஆட்சிக்கு வந்தபோது கரோனாவின் கோரத்தாண்டவம்! அதன் பிறகு மழை - வெள்ளப் பாதிப்புகள்.
அத்தனை சோதனைகளையும் வென்றோம். இந்தச் சோதனையான நேரங்களில் எல்லாம் மக்களோடு மக்களாக நான் இருந்தேன். நான் மட்டுமல்ல, அமைச்சர் பெருமக்கள் இருந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், உள்ளாட்சி அமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் இருந்தார்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் இருந்தார்கள். மொத்தத்தில் அரசாங்கமே இருந்தது.
தமிழ்நாட்டு மக்களே உங்கள் கோரிக்கைகளை எங்கள் தோளில் இறக்கி வையுங்கள். அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம். நாளை மறுநாள் 2022 புதிய
ஆண்டு பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் நான் குறிப்பிட விரும்புவது 2021 முடிந்து 2022 அடுத்த ஆண்டு பிறப்பதாகக் கருத வேண்டாம்.
கடந்த காலச் சுமைகள் - சோகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒரு சிறப்பான ஆண்டு பிறக்கப் போகிறது. மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கக்கூடிய ஆண்டாக இருக்கட்டும்.
இந்தியாவிலேயே இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் இருக்கும் முதலமைச்சர்களை எல்லாம் சுட்டிக்காட்டி, ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அந்த செய்திகள் எல்லாம் வந்தது. எனக்கு அதில் மகிழ்ச்சி கிடையாது, ஒரு பக்கத்தில் இருக்கலாம், அது வேறு. ஆனால், முழு மனநிறைவு அடைய வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று சொல்வதைவிட, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் நம்முடைய தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லக்கூடிய நிலை வந்தால்தான் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி ஏற்படும். ஆகவே, 2022 ஆம் ஆண்டை சிறந்த ஆண்டாக ஆக்குவதற்கு நம்முடைய அரசு தொடர்ந்து தன்னுடைய கடமையை ஆற்றும், அதற்கு நீங்கள் ஒன்றிணைந்து, துணை நின்று கரம் கொடுங்கள். அந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com