தா.பாண்டியன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர்  ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்

இந்திய பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

நாடு போற்றிய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான ஜீவா அவர்களின் அன்பைப் பெற்றவரான  தா.பாண்டியன், இளம் வயதிலிருந்தே பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள், அந்தப் பணியை துறந்துவிட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஜீவா அவர்கள் உருவாக்கிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகவும், பின்னாளில் ஜனசக்தி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். கடந்த பல ஆண்டுகளாகவே  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில்  ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

தா.பாண்டியன் அவர்களை இழந்து வாடும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com