சென்னையில் முழுமையாக வெல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைபற்றியாக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழுமையாக வெல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைபற்றியாக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாதவரத்தில் நடைபெற்ற, சென்னை வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும் முதலில் வந்து பார்ப்பது நானாகத் தான் இருப்பேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும். சுத்தமான - சுகாதாரமான - அழகான - கம்பீரமான சென்னையை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு.

பிரிட்டிஷ்காரர்கள் - பிரெஞ்சுக்காரர்கள் - டச்சுக்காரர்கள் - போர்ச்சுக்கீசியர்கள் - அராபியர்கள் - அர்மீனியர்கள் என்று உலகத்தின் பல்வேறு மக்கள் வாழ்ந்த பாரம்பரியமான ஊர். இந்த ஊரின் பாரம்பரியத்தை அதன் வரலாற்றுப் பெருமைகள் சிதையாமல் நவீனப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இது ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த தலைநகரத்தை நாம் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்.

சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். ஒரு தொகுதி, ஒரே ஒரு தொகுதியைக் கூட விட்டுவிடக் கூடாது.

1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. கலைஞர் தான் தேர்தல் பொறுப்பாளர். அண்ணாவுக்கே நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் வெற்றி பெறுவோம் என்று சொன்னார் கலைஞர்.

அப்படி வெற்றி பெற்றால் கணையாழி அணிவிக்கிறேன் என்றார் அண்ணா. சொன்னது போலவே சென்னையை வென்றோம். கடற்கரைக் கூட்டத்தில் கலைஞருக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா.

திமுகவின் சார்பில் அ.பொ.அரசு அவர்கள் மேயர் ஆனார்கள்.  1967 ஆம் ஆண்டு நான் அரசு அமைக்க அடித்தளம் அமைத்தது சென்னையின் வெற்றி. அத்தகைய முழுமையான வெற்றியை சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சேர்ந்து ஈட்டித்தர வேண்டும். அத்தகைய வெற்றிக்குப் பிறகு அமையும் அரசு, இந்தச் சென்னையை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றும். இது உறுதி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com