கூத்தாநல்லூரில் கேட்பாரற்ற நிலையிலுள்ள தட்டிப் பாலத்தால் மக்கள் அவதி

கூத்தாநல்லூர் அருகே கேட்பாரற்ற நிலையில் உள்ள தட்டிப் பாலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கூத்தாநல்லூரில் கேட்பாரற்ற நிலையிலுள்ள தட்டிப் பாலம்
கூத்தாநல்லூரில் கேட்பாரற்ற நிலையிலுள்ள தட்டிப் பாலம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே கேட்பாரற்ற நிலையில் உள்ள தட்டிப் பாலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கூத்தாநல்லூர் அருகேயுள்ள அத்திக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள வெண்ணற்றின் குறுக்கே அத்திக்கடையையும், அதங்குடி கிராமத்தின் உட்கிராமமான நல்லவலாம் பேத்தி கிராமத்தையும் இணைக்கும் வகையில், மூங்கில்களால் செய்யப்பட்ட தட்டிப் பாலம் உள்ளது.

இப்பாலத்தின் வழியாக, அதங்குடி, களத்தூர், நல்லவலாம் பேத்தி,வெண்ண வாசல், வாழாச்சேரி மற்றும் நீடாமங்கலத்துக்குச் செல்ல குறுக்கு வழியாகவும் பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் மட்டும் இல்லாமல், இப்பாலத்தின் வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்குச் செல்பவர்கள், வெளியூருக்குச் செல்பவர்கள் என ஏராளமானவர்கள் இப்பாலத்தின் மீதுதான் சென்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜமாஅத் சார்பிலும், அதன் பிறகு,  அதங்குடி மற்றும் வெண்ணவாசல் ஊராட்சி சார்பில் பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, யாரும் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

தண்ணீர் இல்லாத காலங்களில் ஆற்றில் இறங்கி வருகின்றனர். வெண்ணாற்றில் தண்ணீர் வந்துவிட்டால், இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இந்தப் பாலத்தின் வழியாக 6க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து தினமும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்தப் பாலம் இல்லையென்றால், ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாழாச்சேரி பாலத்தைச் சுற்றி நடந்து வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், எந்த அவசர சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், ஒரு ஆட்டோக் கூட வர முடியாத துர்பாக்கிய நிலை உள்ளது.  ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுற்றி வந்து அத்திக்கடை மருத்துவமனைக்கு வர வேண்டும். அதனால், பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்துள்ள தட்டிப் பாலத்தை எடுத்து விட்டு, நிரந்தரமாக ஒரு புதிய இரும்புப் பாலமோ அல்லது சிமெண்ட் பாலத்தையோ கட்டித் தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டு கால கோரிக்கையாகும்.

இது குறித்து, அப்பகுதியின் வேன் டிரைவர்கள் சங்கத் தலைவர் அப்துல் ரஹ்மான் கூறியது: தட்டிப் பாலத்தை எடுத்து விட்டு, ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் போகும் அளவிற்கு  நிரந்தரமாக ஒரு பாலத்தை அமைத்துத் தர வேண்டும். ஆற்றில் தண்ணீர் போகும்போது, இந்தப் பாலத்தின் மீது நடந்து போகும்போது, உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டிய நிலை. வெண்ணாற்றில் வந்த தண்ணீரில் தட்டிப் பாலம் அடித்து தள்ளிக் கொண்டு, எந்த நேரத்திலும் முழுமையாக சாய்ந்து விழும் அளவிற்கு உள்ளது. உடனே, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com