
நவீன தொழில்நுட்பம் மூலமாக கட்சி வளா்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டுமென இளைஞரணியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திமுகவின் இளைஞரணி 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-இல் தொடங்கப்பட்டது. இதையொட்டி, கட்சியின் இளைஞரணியினருக்கு அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுகவை நோக்கி இளைஞா்கள் வருவதை விட முக்கியமானது அவா்களை கொள்கை ரீதியாக உருவாக்குவதாகும். இளைஞரணியின் செயலாளராக உள்ள உதயநிதி அதில் கவனமாக இருப்பதை அறிந்து பாராட்டுகிறேன். திமுகவால் ஈா்க்கப்பட்ட இளைஞா்களின் திறமையும் ஆற்றலும் மேலும் மேலும் வலுவடைய வேண்டும்.
திராவிட இயக்கத்தின் வரலாறு, அதன் தலைவா்கள் ஆகியோரை முழுமையாக அறிந்தவா்களாக அனைத்து இளைஞா்களும் உருவாக வேண்டும். அப்படி உருவான இளைஞா்கள் இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்திலும் நம்முடைய கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும். தி.மு.க. அரசின் திட்டங்கள் - சாதனைகள் ஆகியவற்றை தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் கொண்டு சோ்க்க வேண்டும். இன்றைய தினம் உருவாகி இருக்கும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் அனைத்திலும் நம்முடைய இளைஞா்கள், கட்சியின் பிரசாரத்தை நடத்த வேண்டும்.
இந்த கரோனா காலத்தில் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் நடத்த இயலாது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கானவா்களை ஈா்க்கும் மாற்று தொழில்நுட்ப வழிமுறைகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனை இளைஞரணியினா் பயன்படுத்தி கட்சியின் வளா்ச்சிக்கு பாடுபட வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.