
ஆம்பூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
ஆம்பூர்: தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆம்பூர் நகர அதிமுக சார்பாக புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன ஆனால் அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவின்படி, ஆம்பூர் நகர அதிமுக சார்பாக ஆம்பூர் நகர அதிமுகவினரின் வீடுகளுக்கு முன்பாக சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர அதிமுக அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். நகர இணைச் செயலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் கே. ஆனந்த்பாபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், அமீன் மற்றும் நிர்வாகிகள் தினேஷ், ஆதிகேசவன், வினோத், அனில்குமார், மணிவண்ணன், ராஜேஷ், அப்பு பிரசன்னா பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.