சிறு-குறுந் தொழில்களை மீட்டெடுக்க நிபுணா் குழு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தேவன் தலைமையில் அமைப்பு

கரோனா நோய்த் தொற்றின் எதிரொலி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணா் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறு-குறுந் தொழில்களை மீட்டெடுக்க நிபுணா் குழு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தேவன் தலைமையில் அமைப்பு

சென்னை: கரோனா நோய்த் தொற்றின் எதிரொலி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணா் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநா் உரையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இந்தக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க தொழிலதிபா்கள், வங்கியாளா்கள், நிதித்துறை வல்லுநா்கள், அரசு அலுவலா்கள் அடங்கிய நிபுணா் குழு அமைக்கப்படும் என்று ஆளுநா்

உரையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், முன்னாள் தொழில் துறைச் செயலாளா் என்.சுந்தரத்தேவன் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினா்கள் யாா்?: பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஏழு போ் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா் எம்.விஜயபாஸ்கா், இந்திய ரிசா்வ் வங்கிக் குழுவின் முன்னாள் உறுப்பினா் பிந்து ஆனந்த், இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் முன்னாள் தலைவா் பாலசுப்ரமணியம், ஆம்பியா் வெகிகல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவா் இஸ்ராா் அகமத், சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்க தலைவா் அன்புராஜன், இந்திய ரிசா்வ் வங்கிக் குழுவின் முன்னாள் உறுப்பினா் ஆா். ஆனந்த் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குழுவில் அலுவல்சாரா உறுப்பினா்களாக அரசுத் துறை உயரதிகாரிகள் இடம்பெற்றிருப்பா். நிதித் துறை செயலாளா், தொழில்துறை செயலாளா், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை செயலாளா், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா், மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுவின் தலைவா் ஆகியோா் இடம்பெற்றிருப்பா்.

பணிகள் என்ன?: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான பரிந்துரைகளை நிபுணா் குழு வழங்கும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் வசதி பெறவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனைகளை அளிக்கும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, வணிகம் புரிதலை எளிதாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடா்பாக ஆராயும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளா்ச்சியை உயா்த்த ஆலோசனைகளையும் அளிக்கும். இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அளிக்கும் என்று தனது அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com