வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: முதல்வர் அறிவிப்பு
வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானங்கள், சட்டப் பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தின் போது நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரபலங்கள் மறைவுக்கு பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவித்து மெüன அஞ்சலி செலுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானங்கள், சட்டப் பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தின் போது நிறைவேற்றப்படும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ஏ.தமிழரசி (மானாமதுரை) பேசினார். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
அவரது பேச்சில் குறுக்கிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அதனை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும் முழுமையாகப் பிரதிபலிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.
எப்போது நிறைவேறும்?: பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது.
எனவே, வரும் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடரின் போது, உரிய தீர்மானம் கொண்டு வரப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் எதிர்ப்பை முழு மூச்சுடன் பதிவு செய்து, அவற்றைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக் கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாகப் பாதித்து அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதையும் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துவதற்கான தீர்மானமும் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தின் போது நிச்சயமாக நிறைவேறும்.
எழுத்தாளர் கி.ரா., முக்கிய பிரபலங்கள் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது. அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார் பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
மு.பாண்டுரங்கன் (கலசப்பாக்கம்), அ.முஹம்மத் ஜான் (ராணிப்பேட்டை), அ.பாப்பா சுந்தரம் (குளித்தலை), செ.அரங்கநாயகம் (கோவை மேற்கு, தொண்டாமுத்தூர்), தி.செ.விஜயன் (திருவொற்றியூர்), வி.எஸ்.ராஜி (செய்யூர்), கி.ரா.ராஜேந்திரன் (பர்கூர்), ச.சகாதேவன் (செஞ்சி), எல்.சுலோசனா (மேட்டுப்பாளையம்), கே.பி.ராஜூ (பேரூர்), கி.ராமச்சந்திரன் (மன்னார்குடி), எம்.அன்பழகன் (பழநி), ஜெ.பன்னீர்செல்வம் (திருநாவலூர்) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்டன.
அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு சில நிமிடங்கள் அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர்.
முக்கிய பிரபலங்கள்: இதைத் தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் கி.துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகர் விவேக் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் சிறப்புகளை பேரவைத் தலைவர் அப்பாவு பேசினார்.
முக்கிய பிரபலங்கள் ஐந்து பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் மௌனம் காத்தனர். இதன்பின்பு, பேரவை நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

