சிஏஏவை ஏற்கிறதா திமுக? தேர்தல் அறிக்கையால் குழப்பம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கையையும் இணைக்க வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது அந்த சட்டம் குறித்த திமுக நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சிஏஏவை ஏற்கிறதா திமுக? தேர்தல் அறிக்கையால் குழப்பம்


இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கையையும் இணைக்க வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது அந்த சட்டம் குறித்த திமுக நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ):

குடியரிமைச் சட்டத்தில் மத்திய பாஜக அரசு கடந்த 2019-இல் திருத்தம் மேற்கொண்டு சட்டமாக இயற்றியது. இதைத் தொடர்ந்து, இந்த சட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்த நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பதே திருத்தச் சட்டத்தின் நோக்கம்.

இந்த பட்டியலில் இஸ்லாமியர்களைக் குறிப்பிடாதது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டம் இயற்றுவதும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அசாமில் இயற்றப்பட்ட தேசியக் குடியுரிமை பதிவேடு பிற்காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் குடியுரிமையற்றவர்களாக நேரிடும் என்றும் இதை மனதில் கொண்டே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

தில்லி போராட்டமும் வன்முறையும்:

இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக தில்லி, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக இருந்தன. இதில் கடந்தாண்டு ஜனவரி மாதம் தில்லி போராட்டம் வன்முறையில் முடிந்தது நாட்டையே உலுக்கியது.

திமுக நிலைப்பாடு:

திமுக இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிர் நிலைப்பாடு எடுத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது.

"அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும்னு சொல்லி இருந்தால், நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும், புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக உள்ளது. அதனால்தான் எதிர்க்கிறோம்."

2019 டிசம்பரில் குடியரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம் இது.

அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றால் இலங்கை அண்டை நாடு இல்லையா, இலங்கை ஈழத் தமிழர்கள் மட்டும் வரக் கூடாதா? என்ற கேள்வியையும் மு.க. ஸ்டாலின் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக கடந்தாண்டு ஜனவரி மாதம் கோரியது.

இதுதொடர்பான விவாதத்தின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கையில், "குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தையே எதிர்க்கிறோம். இந்தச் சட்டத்தில் கிறிஸ்துவர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் உள்பட அனைவரையும் இணைத்துள்ளனர். இஸ்லாமியர்களையும், ஈழத்தமிழர்களை மட்டும் இணைக்கவில்லை. அதையே எதிர்க்கிறோம்" என்றார்.

கையெழுத்து இயக்கம்:

இதன்பிறகு, கடந்தாண்டு ஜனவரி 24-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக மக்களிடம் பெறப்பட்ட 2.05 கோடி கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு கடந்தாண்டு பிப்ரவரி 16-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டன.

இப்படியாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்நிலைப்பாட்டிலிருந்த திமுக, பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 500-வது அம்சம், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திமுகவின் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைந்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையின் 500-வது அம்சம்:

"இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து, இந்தியாவில் முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தப்படும்."

தேர்தல் அறிக்கையின் 498-வது அம்சமும் இதுவாகத்தான் இருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 4-வது நாடாக இலங்கையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் குடியரிமை திருத்தச் சட்டத்தை திமுக ஏற்றுக்கொண்டுவிட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்ட நிலைப்பாட்டில் திமுக விமர்சித்த இரு விஷயங்கள் இஸ்லாமியர்கள் விடுபட்டதும் ஈழத் தமிழர்கள் விடுபட்டதும். இதில் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும் என்றால், இஸ்லாமியர்கள் பற்றிய திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதும் கேள்விக்குள்ளாகிறது.

மதச்சார்பின்மைக்கு எதிரானது எனக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்த திமுக, பேரவைத் தேர்தலில் மதச்சார்பின்மைக் கூட்டணிக்குத்  தலைமை வகித்துவரும் நிலையில் இந்த சட்டத்தை ஏற்பதைப் போன்ற அம்சம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது திமுகவின் நிலைப்பாட்டில் ஐயத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

சிக்கலான இவ்விஷயம் தொடர்பாக விரைவில் திமுக தரப்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் மதச்சார்பின்மையாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com