
தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ்(60) என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வீடு தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ளது. இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை மாலை 3.50 மணி அளவில் 3 கார்களில் சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் (52) வீட்டுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். பின்னர் அவரது வீட்டில் சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தாராபுரத்தில் ஒரே நாளில் திமுக, மதிமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.