கிழிந்த ஜீன்ஸ் மூலம் சமூகத்துக்குச் சொல்வது என்ன? உத்தரகண்ட் முதல்வர் கேள்வி

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கும் போது அதிர்ச்சி அடைவேன்,
கிழிந்த ஜீன்ஸ் மூலம் சமூகத்துக்குச் சொல்வது என்ன? உத்தரகண்ட் முதல்வர் கேள்வி
கிழிந்த ஜீன்ஸ் மூலம் சமூகத்துக்குச் சொல்வது என்ன? உத்தரகண்ட் முதல்வர் கேள்வி


டேராடூன்: கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கும் போது அதிர்ச்சி அடைவேன், இதன் மூலம் அவர்கள் சமூகத்துக்குச் சொல்லும் தகவல் என்ன என்று உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள தீரத் சிங் ராவத் கூறியுள்ளார்.

உத்தரகண்டில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தீரத் சிங் ராவத், கத்திரிக்கோலின் மூலம் ஏற்பட்டிருக்கும் கலாசாரம் என்று பேசத் தொடங்கினார். கால் முட்டிகள் தெரியும்படி கிழிந்த ஆடை அணிந்திருப்பவர்கள்தான் தற்போதைய பணக்காரக் குழந்தைகள். இந்த கலாசாரம் எங்கிருந்து வருகிறது, வீட்டிலிருந்து வரவில்லை என்றால் பள்ளியிலா அல்லது பாடம் கற்றுத் தரும் ஆசிரியரிடா? யாரிடம் தவறு இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதால், அவர்கள் முட்டிகளைக் காண்பிக்கலாமா? இது நல்லதா? இது அனைத்தும் மேற்கத்திய கலாசாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் காரணமாக விளைந்ததே. 

யோகா போன்றவற்றை அவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். நம்மைப் போன்று உடல் முழுக்க மூடியபடி ஆடைகளை அணிகிறார்கள்,  ஆனால் நாமோ நம் கலாசாரத்தை மறந்து அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று கவலையோடு தெரிவித்தார்.

உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம், டேராடூனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தீரத் சிங் ராவத் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

புதிய முதல்வராத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தீரத் சிங் ராவத், பௌரி கா்வால் தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளாா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாா். கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளராகவும் உள்ளாா்.

முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது மாநில பாஜகவினா் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் ரமண் சிங் தலைமையிலான மேலிட பாா்வையிளாா்கள் குழு அந்த மாநிலத்துக்குச் சென்று ஆய்வு செய்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி, திரிவேந்திர சிங் ராவத் சிங்கை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com