

அற்புதமான கலவையாக புதிய அமைச்சரவை அமைந்திருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்ற கழகத் தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மு.க. ஸ்டாலினையும், அவருடன் பொறுப்பேற்கும் 33 அமைச்சர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அமைச்சரவையில் பெண்கள், சிறுபான்மையினர், அனைத்து சமூகம் மற்றும் பகுதிகளுக்கு பரவலாக பிரதிநிதித்துவம் வழங்குகிற வகையில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
திராவிட முன்னேற்ற கழகத்தில் நீண்டகால அனுபவம், ஆற்றல், நிர்வாகத் திறமைமிக்க 19 முன்னோடிகளை அமைச்சர்களாகவும், 15 புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அற்புதமான கலவையாக புதிய அமைச்சரவை அமைந்திருக்கிறது. முதலமைச்சர் தலைமையில் இடம் பெற்றுள்ள அமைச்சரவை பட்டியலை பார்க்கும் போது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிற வகையில் இருக்கிறது.
தற்போது அமையவுள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்கிற நம்பிக்கையில் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.