
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில்.
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தினசரி 300 -க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே.சாந்தா அருள்மொழி மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் 10 பேர் வரையில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி கரோனா பரிசோதனை மையமான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையத்தில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை பிற்பகல் முதல் பரிசோதனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்னும் 2 நாள்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடம் மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இருந்திட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.