
முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழக மக்களின் உயிரைக் காக்க உலகத் தமிழர்கள் நிதியளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் முதல்வர் பேசியதாவது:
தமிழக அரசு மருத்துவம் மற்றும் நிதி ஆகிய இரண்டு முக்கிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. நெருக்கடியை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.
கரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை வீரியம் மிக்கதாக உள்ளது. படுக்கைகள், மருந்து, ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பலரும் நிதி அளித்து வருகின்றனர். அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் இணைந்து பல உதவிகளை அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல உலகத் தமிழர்கள் அனைவரும் நிதி வழங்க முன்வர வேண்டும். உங்கள் நிதி கரோனாவை ஒழிக்க உதவும், மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுக என்று கோரிக்கை விடுத்துள்ளார்.