
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மூவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 34,794 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 473 பேர் உயிரிழந்துள்ளனர். 3,734 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிர, மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.