கூத்தாநல்லூர்: திமுக இளைஞரணியினர் 2,500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கூத்தாநல்லூர்: திமுக இளைஞரணியினர் 2,500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் திமுக நகர இளைஞரணி சார்பில், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Published on

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் திமுக நகர இளைஞரணி சார்பில், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கண்ணுக்குத் தெரியாத கிருமியான கரோனா தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையுமே புரட்டி போட்டு, மக்களை வாட்டி வதைத்து தொழில் மற்றும் வணிகத்தை சீரழித்து வருகிறது.

கரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரமே படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் கல்வி வீணாகியுள்ளது. தனி மனிதனின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு விட்டது. கரோனா என்ற பெரும் தொற்றால், ஒன்னரை ஆண்டுகளாக, அரசுகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சொல்ல முடியாத அளவிற்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வருவதுபோல், முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று என கரோனாவின் சுற்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மேலும் வீரியம் எடுத்து, விஸ்வரூபத்துடன் வந்து கொண்டுதான் இருக்கிறது. லட்சங்களைத் தாண்டி மயானங்களில் இடம் இல்லாமல், கருத்திருக்கும் அளவிற்கு உயிழப்புகள் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கரோனாவின் தொற்றை தடுப்பதற்கு, சில மாத்திரைகளையும், சித்தா மருந்துகளையும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஒரு புறம் தடுப்பு ஊசியும் போடப்பட்டு வருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தச் சொல்லி மருத்துவர்களும், அரசும் பரிந்துரை செய்கின்றன.

அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் தங்களுக்கு ஏற்றார் போல வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினரும், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் உத்தரவுப்படி, கூத்தாநல்லூர் திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன் ஆலோசனைப்படி, திமுக இளைஞரணி அமைப்பினர் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.

நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எம்.ரசீன் பைசல் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புரோஜிதீன் முன்னிலையில் அந்தந்த வார்டு செயலாளர்களின் ஏற்பாட்டில், இரண்டாயிரத்து 500 பேருக்கும் மேல் கபசுர குடிநீர் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, நகராட்சியின் 24 வார்டுகளிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது. நிகழ்வில், 10 ஆவது வார்டு செயலாளர் டி.மதியழகன், வார்டு இளைஞரணி அமைப்பாளர் எம்.பி.பைசல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com