
100 நாள் திட்ட நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால் பல ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளன. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி வரை ரூ.1,178.12 கோடியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல கிராமப்புற குடும்பங்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயரும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு உரியத் தொகையை வழங்கும் வகையில், தமிழகத்துக்கு உடனடியாக தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...