தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
புழல் ஏரி
புழல் ஏரி


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமையும் விடாமல் பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களுக்கான நீர்வரத்து கால்வாய்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதோடு, சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பூண்டி  ஏரி

தொடர்மழையால் நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.

அதில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 35 உயரமும், 3231 மில்லியன் கன அடி வரையில் நீரை சேமித்துக் கொள்ளலாம். தற்போது ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 34.20 அடியும், 2884 மில்லியன் கன அடியாகவும் நீர் இருப்பு உள்ளது. அதோடு, ஏரிக்கான நீர் வரத்து கால்வாய்களில் மழை நீர் வரத்து, ஆந்திரம் மாநிலம் அம்மம்பள்ளி மற்றும் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர் என வினாடிக்கு 4047 கன அடியாக நீர் வரத்து உள்ளது. இதனால் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி நீரின் வரத்துக்கு ஏற்ப வெளியேற்றப்படுகிறது.

அதன் அடிப்படையில் பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 1000 கனஅடியும், 8 மணிக்கு 2 ஆயிரம் கன அடியும் அதையடுத்து 9 மணி முதல் 3 ஆயிரம் கன அடியாகவும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதையடுத்து கொசஸ்தலை ஆற்று கரையோரங்களைச் சேர்ந்த கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தியுள்ளார்.   
   
புழல் ஏரி
புழல் ஏரியின் உயரம் 21.20 அடியும், 3300 மில்லியன் கன அடி வரையில் நீரை சேமிக்கலாம். தற்போதைய நிலையில்  19.30 அடி உயரமும், 2872 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு ஏரிக்கு நீர் வரத்தாக வினாடிக்கு 1487 கன அடியாகவும் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக ஏரியிலிருந்து வினாடிக்கு 148 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், நீர் மட்டம் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.    
 
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியும், 3645 மில்லியன் கனஅடி நீர் வரையில் சேமிக்கலாம். தற்போதைய நிலையில் 21.30 அடி உயரமும், 2934 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்தாக விநாடிக்கு 600 கன அடியாக உள்ளது. இதைக் கருத்திற்கொண்டு சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக விநாடிக்கு 106 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரி 
சோழவரம் ஏரி 18.86 உயரமும், 1081 மில்லியன் கன அடிநீர் வரையில் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலையில்  18.09 அடி உயரமும், 915 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 508 கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடிநீர் வரையில் சேமித்து வைக்கலாம். தற்போதைய 36.21 அடி உயரமும், 491 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியாக உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com