
சென்னையில் நாளை 2,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர், தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- மகாராஷ்டிரத்தில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் 14.11.2021 அன்று 2000 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 8வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள்
https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
எனவே, கரேனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.