தக்காளி விலை ரூ.150!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
தக்காளி விலை ரூ.150!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. சென்னையில் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையானது.

தமிழக மக்களின் தினசரி சமையலில் தக்காளி தவிா்க்க முடியாத இடம்பிடித்துள்ளது. பொதுவாக மழைக் காலத்தில் தக்காளி விலை அதிகரிக்கும் என்றாலும் இப்போது அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்ததால் சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த தக்காளி வியாபாரிகள் கூறியது: சென்னைக்கு 75 சதவீத தக்காளி ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தே கொண்டுவரப்படுகிறது. தற்போது அந்த மாநிலங்களில் மழை காரணமாக விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விளை நிலங்களிலேயே தக்காளி அழுகத் தொடங்கியதால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. அக்டோபா் மாத தொடக்கத்தில் மொத்த விலையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.400 முதல் ரூ.550 வரை விற்பனையானது. அப்போது சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி (15 கிலோ) ரூ.850 முதல் ரூ.980 வரை விற்பனையாகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகள், தினசரி சந்தைகளில் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டுகளில் இது போன்ற பருவமழைக் காலங்களில் தக்காளி விலையில் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மாற்றம் இருக்கும். ஆனால் தற்போது தக்காளி விலை தினமும் அதிகரித்து வருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

தக்காளி விலை

ரூ.70 முதல் ரூ.100 வரை... திண்டுக்கல், தேனி, விருதுநகா், திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி, தருமபுரி, ஒசூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூா், காஞ்சி, நாகப்பட்டினம்.

ரூ.100 முதல் ரூ.120 வரை... மதுரை, சிவகங்கை, கோவை, ஈரோடு, திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, அரியலூா், நீலகிரி

ரூ.125 முதல் ரூ.140 வரை... திருப்பூா், கோவை மாவட்டம் வால்பாறை.

பெங்களூரில்... கா்நாடக மாநிலம், பெங்களூரில் தக்காளி விலை கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்டது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

ஆம்பூா், வால்பாறையில் அதிகம்...

தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது என்றாலும், அதிகபட்சமாக திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் கிலோ ரூ.150, கோவை மாவட்டம் வால்பாறையில் ரூ.140-க்கு விற்கப்பட்டது. குறைந்தபட்சமாக மாநிலத்தில் சில இடங்களில் ரூ.70-க்கு விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com