ஆம்பூர் அருகே உடைந்தது தடுப்பணை: வீணானது விளைநிலங்களுக்கு தேவையான தண்ணீர்

ஆம்பூர் அருகே தடுப்பணையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் விரிசல் ஏற்பட்டு தடுப்பணை உடைந்தது. விளைநிலங்களுக்கு தேவையான தண்ணீர் அங்கிருந்து வெளியேறி வீணானது.
ஆம்பூர் மேல்மிட்டாளம் காளியம்மன் கோவில் அருகே உள்ள தடுப்பணை உடைந்து தேங்கிய தண்ணீரோடு சேதமானது.
ஆம்பூர் மேல்மிட்டாளம் காளியம்மன் கோவில் அருகே உள்ள தடுப்பணை உடைந்து தேங்கிய தண்ணீரோடு சேதமானது.


ஆம்பூர் அருகே தடுப்பணையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் விரிசல் ஏற்பட்டு தடுப்பணை உடைந்தது. விளைநிலங்களுக்கு தேவையான தண்ணீர் அங்கிருந்து வெளியேறிய தண்ணீர், கைலாசகிரி - கடாம்பூர் - உதயேந்திரம் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடி வீணானது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில், பைரப்பள்ளி அருகே சாணிகணவாய் கானாறு ஓடுகிறது. தமிழக - ஆந்திர வன எல்லையில் உள்ள பெரியதுருகம் வனப்பகுதியில் இந்த சாணிகணவாய் கானாறு உற்பத்தியாகிறது.

இங்கு உற்பத்தியாகும் இந்த சாணி கணவாய் கானாறு , சின்னதுருகம், தேன்கல் கானாறு, தொம்மகுட்டை, சேஷவன் கிணறு, எர்ரகுண்ட , ரெங்கையன் கிணறுகள் வழியாக ஓடி வந்து, பைரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே உள்ள மேர்லமிட்டா ஏரியில் நிரம்புகிறது.

பின்னர் விவசாயிகளின் நலன்களுக்காக வேளாண்மைத் துறையினர் மற்றும் உலக வங்கி நிதியுதவியின் கீழ் கட்டப்பட்ட கசிவு நீர்க் குட்டைகளில் நீர் தேங்குகிறது. பின்னர் மேல்மிட்டாளம் காளியம்மன் கோவில் அருகே உள்ள பெரிய தடுப்பணையில் நீர் தேங்குகிறது.

அந்தத் தடுப்பணையில் தேங்கும் தண்ணீர் மீதமாகி, மேல்மிட்டாளம், மிட்டாளம், பந்தேரப்பள்ளி வழியாக ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி, கன்றாம்பள்ளி ஏரியில் கடைசியாக வந்து நிரம்புகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் இந்த கானாற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த கானாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பந்தேரப்பல்லி சுடுகாடு கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிக அளவு மழை வெள்ளத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதிக அளவு வெள்ளம் வந்ததால், இப்போது மேர்ல மிட்டா ஏரி , கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வருகிறது. இப்போதும் இந்த கானாற்றில் வரும் தண்ணீரால், நீர்நிலைகளில் நிரம்பும் தண்ணீர் மீதமாகி, துத்திப்பட்டு ஊராட்சி, கன்றாம்பள்ளி ஏரிக்கு இன்று வரை வந்து கொண்டுள்ளது.

தடுப்பணை உடைந்து செல்லும் தண்ணீரை பார்வையிடும் அந்த பகுதியினர். 

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய கன்றாம்பள்ளி ஏரி, இன்னும் சில நாள்களில் நிரம்ப உள்ளது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு, மேல்மிட்டாளம் காளியம்மன் கோவில் அருகே உள்ள தடுப்பணை அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் விரிசல் ஏற்பட்டு தடுப்பணை உடைந்தது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் , கைலாசகிரி - கடாம்பூர் - உதயேந்திரம் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடி வீணானது.

விவசாயிகளின் நலன்களுக்காக கட்டப்பட்ட தடுப்பணை தேங்கிய தண்ணீரோடு சேதமானது இப்பகுதி விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. 

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் ஒன்றியக் குழு உறுப்பினர் மகாதேவனை அழைத்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், இப்போது வந்து கொண்டிருக்கும் மழை வெள்ள நீரையாவது, தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். 

உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com