தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வந்தது சுங்கக் கட்டண மோசடி

பாஸ்டேக் முறையில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், இதுவரை நடைபெற்று வந்த சுங்கக் கட்டண மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வந்தது சுங்கக் கட்டண மோசடி
தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வந்தது சுங்கக் கட்டண மோசடி


சென்னை: பாஸ்டேக் முறையில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், இதுவரை நடைபெற்று வந்த சுங்கக் கட்டண மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு, தமிழகத்தில் சுங்கக் கட்டண வசூல் பல மடங்கு அதிகரித்திருப்பது, இதுவரை பல கோடி சுங்கக் கட்டணம் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, பரனூரில் அமைந்துள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் கூடுதலாக 7.39 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் முழுக்க முழுக்க பாஸ்டேக் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதன் மூலம், 2019ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும் கூட, பெரும்பாலான சுங்கக் கட்டண வசூல் மறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது கூடுதலாக நினைவில் கொள்ள வேண்டிய தகவல்.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதி 2008-ன்படி, ஒட்டுமொத்த திட்டச் செலவிலிருந்து 60 சதவீதத்தை பயனர் கட்டணத்திலிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இவ்வாறு சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் தொகை முழுமையாகக் கணக்குக் காட்டப்படாமல் விடுபட்டால், 60 சதவீதத் தொகையை வசூலிக்க மேலும் கால தாமதமாகும். இதனால், ஒப்பந்தப்படி, பணம் வசூலித்த காலத்துக்குப் பிறகும் சுங்கச்சாவடியை நடத்திக் கொள்ள இயலும். இது குறித்து விசாரணை நடத்தி நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று சரக்கு லாரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உண்மை தெரிய வந்தது எப்படி?
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த பிறகு, எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் வாகனங்கள் பரனூர் சங்கச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ.3.14 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பாஸ்டேன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2021 ஜூலையில் மட்டும் 12.47 லட்சம் வாகனங்கள் மூலம் ரூ.8.83 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது.

இந்த தகவல்களை, காஞ்சிபுரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2019 ஜூலையில் வெறும் 20 சதவீத சுங்கக் கட்டணம் தான் பாஸ்டேக் முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது. மற்றவை ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலையில் 91.6 சதவீதக் கட்டணம் பாஸ்டேக் முறையிலும், மற்றவை ரொக்கமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு வேறு எந்த அறிவியல்பூர்வ காரணங்களும் இல்லை என்றும், முறைகேடு நடந்திருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

பரனூர் சுங்கச்  சாவடியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதையே, கடந்த 10 - 15 ஆண்டுகளில் அனைத்துச் சுங்கக் கட்டணங்களையும் கணக்கிட்டால், முறைகேடு செய்யப்பட்ட பணம் மட்டும் பல நூறு கோடிகளைத்தாண்டும். இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னிந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கழக பொதுச் செயலாளர் ஜி.ஆர். சண்முகப்பா வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com