உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி என்று வாழ்ந்த வ.உ.சி.

வங்காளத்தில் விபின் சந்திரபாலும், பஞ்சாபில் லாலாலஜபதி ராயும், மராத்தியத்தில் பாலகங்காதர திலகரும்
உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி என்று வாழ்ந்த வ.உ.சி.
உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி என்று வாழ்ந்த வ.உ.சி.

வங்காளத்தில் விபின் சந்திரபாலும், பஞ்சாபில் லாலாலஜபதி ராயும், மராத்தியத்தில் பாலகங்காதர திலகரும் விடுதலைப் போராட்டத் தளபதிகளாக விளங்கியபோது தமிழ்நாட்டில் சிதம்பரனார் விடுதலைத் தளபதியாக திகழ்ந்தார்.

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்த் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பல தளங்களில் இந்நாட்டிற்கு உழைத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன், சிதம்பரனாரிடம் வேதாந்த சித்தாந்த மனமே வீசும் என்று கூறும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவரை ஒரு தத்துவ ஞானத் தலைவனாக நாட்டுக்கு அடையாளம் காட்டினார். பல்வேறு அறிய ஆற்றல்கள் வ.உ.சி யிடம் ஆமை போல் அடங்கி இருந்தாலும் அரசியல் புரட்சி மட்டுமே தலை தூக்கியது. அந்த புரட்சியானது மக்களை விடுதலை போராட்டத்தில் தீவிரமாக போராட வைத்தது.

சிதம்பரம் பிள்ளையின் மேடை சொற்பொழிவு முழக்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட பிரிட்டிஷ் நீதிபதி ஃபின்ஹே அவருக்கு கடுமையான தண்டனை வழங்கினார்.

வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை தமிழகம் ஒரு சிறு அடையாளத்தில் மறைத்து விடக்கூடாது. இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 1872 செப்டம்பர் 5ம் நாள் உலகநாதன் பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இன்றைய தினம் அவருடைய பிறந்தநாள். 

இதையும் படிக்கலாமே.. திருக்குறள் அன்பன் வ.உ.சி.

அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிலும் சேர்ந்து கல்வி பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக திகழ்ந்தவர். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி. உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

வ.உ.சி. அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக, பல சமயங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்தார், இதனால் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என புகழ் பெற்றார் வ.உ.சி.

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணிநேரம் ஓய்வில்லாமல் வேலை செய்வதையும், விடுமுறையே இல்லாமல் சிரமப்படுவதையும் கண்டு மனம் நொந்தார். அதை ஒன்பது நாள்கள் தொடர்ந்து நடத்திய  போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை, வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். 

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள். அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜபதிராய் , பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி ஆகியோர் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழுமனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். 

நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' நிறுவனத்தை நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் விட்டதை வெறும் வணிகமாக அவர் பார்க்கவில்லை. கப்பலுக்காக தன் சொத்தை விற்றுக் கடன் வாங்கி இரண்டு கப்பல்களுடன்  கப்பல் போக்குவரத்தை இலங்கைக்கும், தூத்துகுடிக்கும் இடையில் தொடங்கினார்.
அதற்குமுன் ஆங்கிலேயர்கள் அந்த போக்குவரத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்து பெரிய லாபம் பார்த்து வந்தனர். வ.உ.சியின் “சுதேசி கப்பல்” வந்ததும் அது மக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்று வளர்ந்தது. காரணம் வ.உ.சி ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் விட்ட தகவல் நாடு முழுவதும் காட்டு தீ போல பரவியது.

இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்ப்பட்டது. அது மட்டுமில்லாமல் கப்பலை வைத்து வ.உ.சி தூத்துக்குடி முழுவதும் சுதந்திர உணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது இருந்த திருநெல்வேலி ஆட்சியர், மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த பகுதியில் குறிப்பாக வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கிய பின்பு, மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். அது ஆங்கிலேயர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை, கோபத்தையும்  ஏற்படுத்தியது.

ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது.

‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.

கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.

அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன்நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்கை அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார்.

ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து, ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைகள் மூடப்பட்டு , நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தார்கள். பிரிட்டஷ் அரசு கண்டுகொள்ளவில்லை. 
தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே, “ சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதி நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். பின்னர் அந்த தண்டனை மேல்முறையீட்டுக்கப்  பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். 
தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.

சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். 
சிறைச்சாலையில் மாட்டிற்குப் பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்கச் செய்து ஆங்கிலேயர்கள் அவருக்கு சித்ரவதை கொடுத்தனர். கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின; சணல் நூற்று, கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப் புரட்டி போட்டது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

இப்படி பல தொல்லைகளை சிறையில் அனுபவித்த போதும் அவர் அமைதியாக இருக்கவில்லை. தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். மேலும் தனது சுயசரிதையையும் எழுத ஆரம்பித்தார். சிறையில் இருக்கும் போதே தத்துவ எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அது மட்டுமில்லாமல் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழின் மிக முக்கியமான காவியங்களுக்கு விளக்க உரை எழுதி உள்ளார்.

அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். 
விடுதலைக்கு பின்பு சிறை வாசலில் பெரிய அளவில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை எதிர்பார்த்த வ.உ.சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. விடுதலை பெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடும்போது அந்நூலின் முகப்பில் "இந்நூலின் எழுத்து, கட்டமைப்பு, அச்சு, மை யாவும் சுதேசியம்!" என்று குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரின்  ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அவரால் வழக்கறிஞராக பணி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால், அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். தனது கடன்களைத் திருப்பி செலுத்த முடியாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். 

அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார். அந்த காலத்திலே லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார்.

பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?" என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய அவரது இறுதி மூச்சை விட்டார், ஆம், தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936 அன்று தனது இன்னுயிரை  துறந்தார். இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய உயிலை படித்தால் நமக்கு கண்ணீர் பெருகி ஓடும். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
 
தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து உடல் வருத்தி கடும் இன்னல்களை பெற்று நாட்டின் சுதந்திரத் தாகத்தை தங்கள் உதிரத்தால் உண்டாக்கி, விடுதலையப் பெற்றுத் தந்த தியாகிகள் வாழ்வை நினைவு கூர்ந்தால் இன்றைய ஜனநாயகத்தில் மக்களிடமும், அரசியலிலும் தூய்மை வரும்.

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com