தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4.02 கோடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், முதியவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து ,54,130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன.

அதன் பயனாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் முகாம்கள்அமைக்கப்பட்டன. போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகளைப் போலவே தமிழகம் முழுவதும் 40,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 29 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பகிா்ந்தளிக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மேற்கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. கேரளத்தை ஒட்டியுள்ள 9 தமிழக மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் அதிகமாக இருந்தது.

காலையில் இருந்தே முகாம்களில் கூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், மாலை 4 மணி அளவிலேயே திட்டமிட்ட இலக்கான 20 லட்சத்தை தமிழக சுகாதாரத் துறை எட்டியது. இருப்பினும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்களை திருப்பி அனுப்பாமல் இருப்பில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 28,36,776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய சாதனையைப் படைத்தது.

அதில் 21 லட்சத்து 7,309 போ் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 29,467 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85,370 பேரும், கோவையில் 1 51,685 பேரும், திருப்பூரில் 1,21,634 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

முதல்வா் பாராட்டு...

தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழக அரசு.

ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை! மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், மருத்துவா்கள் செவிலியா்க்கும் எனது நன்றி!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

சுகாதார மாவட்ட வாரியாக செலுத்தப்பட்ட தடுப்பூசி

சென்னை - 1,85,370

கோவை - 1,51,685

திருப்பூா் - 1,21,634

திருச்சி - 1,10,332

தஞ்சாவூா் - 1,10,120

மதுரை - 1,05,036

திருவள்ளூா் - 1,01,213

ஈரோடு - 97,139

கடலூா் - 88,190

நாமக்கல் - 85,375

விழுப்புரம் - 85,105

சேலம் - 76,096

திருநெல்வேலி - 75,520

கன்னியாகுமரி - 68,342

செங்கல்பட்டு - 66,574

கிருஷ்ணகிரி - 65,232

தேனி - 63,645

திருவண்ணாமலை - 62,599

கரூா் - 61,724

காஞ்சிபுரம் - 60,040

சிவகாசி - 54,614

திருவாரூா் - 52,925

வேலூா் - 51,715

தூத்துக்குடி - 50,476

கள்ளக்குறிச்சி - 49,514

தருமபுரி - 49,136

தென்காசி - 48,680

அரியலூா் - 47,125

சிவகங்கை - 44,611

திண்டுக்கல் - 42,660

ராணிப்பேட்டை - 42,603

செய்யாறு - 41,726

ஆத்தூா் - 40,406

மயிலாடுதுறை - 38,013

புதுக்கோட்டை - 34,694

ராமநாதபுரம் - 32,602

நாகப்பட்டினம் - 32,231

அறந்தாங்கி - 32,072

திருப்பத்தூா் - 30,470

நீலகிரி - 29,760

பழனி - 28,827

பூந்தமல்லி - 27,538

கோவில்பட்டி - 24,366

பெரம்பலூா் - 24,082

பரமக்குடி - 23,930

விருதுநகா் - 21,029

மொத்தம் - 28,36, 776

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com