வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து விவகாரம்: இபிஎஸ் கூறிய கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பாக இபிஎஸ் கூறிய கருத்து கண்டனத்திற்குரியது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து விவகாரம்: இபிஎஸ் கூறிய கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பாக இபிஎஸ் கூறிய கருத்து கண்டனத்திற்குரியது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் முடிவு எடுத்த - அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, “அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்தப்பட்ட அவசர செயற்குழுவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பா.ம.க. வழக்கறிஞர் பாலுவும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எப்படி தமிழ்நாடு அரசு - குறிப்பாக எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பாடுபட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ - நேற்று வரை அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பொறுக்கவில்லை. பொறாமைத் தீயில் வெந்து நொந்து போய் திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். தனது தவறு உச்சநீதிமன்றத்தில் தோலுரிக்கப்பட்டு விட்டதே என்று திமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 

இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் - அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளையும் கூட- வன்னியர் சமுதாய நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப் போராட்டம் நடத்தி - இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த 7 கருத்துக்களில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் இப்போது அளித்துள்ளது. அது எங்கள் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் திறமையான சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதிமுக ஆட்சியில் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், சண்முகம் போன்ற சட்ட அமைச்சராக இருந்தவரின் அலட்சியமும் – தேர்தலுக்காக “வேண்டா வெறுப்பாக” எடப்பாடி பழனிசாமி அளித்த இட ஒதுக்கீடுமே இந்தச் சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி - அதில் வன்னியர் சமுதாயம் பயன்பெறும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் வளர்ச்சியை, பட்டியலின- பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை சமூகநீதி மூலம் அழகு பார்த்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தி - சமூகநீதியில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர். அவர் வழியில் வந்துள்ள எங்கள் கட்சித் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பழனிசாமி, சண்முகம் போன்றவர்கள் சமூகநீதி பற்றி வகுப்பு எடுக்க வேண்டாம். “போராட்டம் இன்றி இட ஒதுக்கீடு கிடைக்கும். தம்பி ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். 

எங்கள் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com