கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்.
கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்.
Published on
Updated on
1 min read


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.

9 ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

அதனையடுத்து, உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. காலை 6.35 மணிக்கு மேல் 7.25  மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.30 மணிக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, மதிமுக தலைமை கழகச் செயலர் துரை வைகோ, பி.எஸ்.ஆர். கல்வி குழும தாளாளர் சோலைசாமி, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர் அமுதா, இருந்து அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, கோயில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்திற்கு கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் தலைமை வகித்தார். செயலர் ஜெனரேஸ், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், இணைச் செயலர் செல்வராஜ், கம்மவார் மகாஜன சங்க மண்டலத் தலைவர் பொன்ராஜ், கம்மவார் சங்க முன்னாள் தலைவர்கள் எஸ்.ஹரிபாலகன், கனகராஜ், ஆர்.வி.எஸ்.துரைராஜ், பி.ஆர்.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, உறுப்பினர் திருப்பதிராஜா, லட்சுமி சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் கோவிந்தராஜ், பாமக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 150 போலீஸார், 50 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வியாழக்கிழமை (ஏப்.14) தீர்த்தவாரியும், வெள்ளிக்கிழமை (ஏப்.15)  நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com