ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறைவு
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே விசாரணைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடா்ச்சியாக 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
இதில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, இளவரசி உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக முன்னாள் பிரமுகர் புகழேந்தி கோரிக்கை விடுத்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் அறிக்கையானது விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.