இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியிருப்பது என்னவென்றால், தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அத்தியூத்து அருகே வந்த போது, சாஹுல் ஹமீது என்ற பயணி, சக பயணியிடம் தனக்கு நெஞ்ச வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனடியாக சக பயணி 108க்கு அழைப்பு விடுத்து ஆம்புலன்ஸ் வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. 20 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டும். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவரது நிலைமை மோசமடைவதைப் பார்த்த ஓட்டுநரும், நடத்துநரும், பேருந்துப் பயணிகளின் அனுமதியோடு, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கியுள்ளார். அத்தியூத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்ட ஹமீதுக்கு அங்கு உயிர் காக்கும் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.