கொள்ளிடம் ஆற்றின்  வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்: அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு

சீர்காழி அருகே கொள்ளிடம் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம் ஆற்றின்  வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்: அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு

சீர்காழி அருகே கொள்ளிடம் வழியே 2.25 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மெய்ய நாதன், விரைவில் நிரந்தர தடுப்புச் சுவர் மற்றும் தடுப்பணை அமைக்கப்படும் என உறுதியளித்தார். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே தற்போது 1.75 லட்சம் கனஅடி உபரி நீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது. மாலைக்குள் 2.25 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட அளக்குடி கிராமத்தில் 3000 மணல் மூட்டைகள் 300 சவுக்கை கட்டைகள் கொண்டு பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கடந்த காலங்களில் உபரி நீர் திறக்கப்பட்ட போது ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாதவாறு தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட தடுப்பணை அறிவிப்பு அரசாணை வெளியிடாமலும் நிதி ஒதுக்கீடு செய்யாமலும் பெயரளவில் மக்களுக்காக அறிவிக்கப்பட்ட வெற்று அறிவிப்பு என்றார். 

மேலும், தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் அளக்குடியில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீரை தேக்குவதற்காக தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கவும் முதல்வரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார். 

உபரி நீர் அதிகரிப்பால் கரையோரம் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் எனவும், தொடர்ந்து கரையோரப் பகுதியை முழுவதுமாக அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com