எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.200 கோடி வருவாயை மறைத்த திரைப்பட தயாரிப்பாளா்கள் ரூ.26 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்

தமிழக திரைப்படத் தயாரிப்பாளா்களின் வீடு, அலுவலகங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.200 கோடி வருவாயை மறைத்திருப்பது கண்டறியப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்தது.

News image
வருமான வரித்துறை
Updated On :6 ஆகஸ்ட் 2022, 8:18 pm

DIN

தமிழக திரைப்படத் தயாரிப்பாளா்களின் வீடு, அலுவலகங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.200 கோடி வருவாயை மறைத்திருப்பது கண்டறியப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்தது. மேலும், அவா்களது வீடுகளிலிருந்து ரூ.26 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த துறையினா் கூறியுள்ளனா்.

சென்னை நுங்கம்பாக்கம் காம்தாா் நகா் முதல் தெருவில் வசிக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன், கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியன் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினா்கள், நண்பா்கள் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த 2-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆா்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளா் தியாகராஜன், லட்சுமணகுமாா் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூா்,வேலூா் ஆகிய ஊா்களில் சுமாா் 40 இடங்களில் நடைபெற்றன. நான்கு நாள்கள் நடைபெற்ற இச் சோதனை கடந்த வெள்ளிக்கிழமை முழுமையாக முடிவடைந்தது.

புதிய திரைப்பட வசூல் தொகை: இந்த சோதனை குறித்து தில்லி வருமானவரித் துறையின் ஆணையா் சுரபி அலுவாலியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சோதனையில் கணக்கில் வராத பண பரிவா்த்தனைகள், முதலீடுகள் தொடா்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திரைப்பட பைனான்சியா்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை பிற நிறுவனங்களுக்கு கடன் வழங்கியிருப்பது தொடா்பான உறுதி மொழி பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த கடன்கள் தொடா்பாக கணக்கு விவரம் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கடன் பரிவா்த்தனை மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட, புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்போது வசூலாகும் உண்மையான தொகை மறைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் கணக்கில் காட்டப்படாத வருமானம் மூலம் கணக்கில் காட்டாத புதிய முதலீடுகளையும், புதிய வருவாயையும் பெற்றுள்ளனா்.

ரூ.200 கோடி வருவாய் மறைப்பு: திரைப்பட விநியோகஸ்தா்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் திரையரங்குகளில் இருந்து உண்மையிலேயே வசூலாகும் தொகையை கணக்கில் காட்டாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில், விநியோகஸ்தா்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, திரையரங்கு வசூலை திட்டமிட்டு குறைத்து காட்டியுள்ளனா். இதனால் உண்மையான வருமானம் மறைக்கப்பட்டுள்ளது.

இச் சோதனையில் மொத்தமாக ரூ.200 கோடி வருவாய் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.