அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கியவர் மாயத் தேவர்!

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதல்முறையாக மக்களவைக்கு தேர்வாகி, அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கியவர் மாயத் தேவர்.
எம்.ஜி.ஆர். உடன் மாயத் தேவர்
எம்.ஜி.ஆர். உடன் மாயத் தேவர்
Published on
Updated on
2 min read

திண்டுக்கல்: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதல்முறையாக மக்களவைக்கு தேர்வாகி, அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கியவர் மாயத் தேவர்.
 
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், கடந்த 1972-ல் அதிமுகவைத் தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த இடம் திண்டுக்கல். அந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட கே. மாயத் தேவர் வெற்றிப் பெற்றார்.
 
திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக என்ற கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர், தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித்து தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் திமுக உறுப்பினர் ராஜாங்கம் மறைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சித் தொடங்கிய சிறிது நாள்களிலேயே, தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளராக கே. மாயத்தேவரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எம்ஜிஆர் களம் இறக்கினார். திமுக தரப்பில் பொன். முத்துராமலிங்கம், காங்கிரஸ் தரப்பில் என்எஸ்வி. சித்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 2.65 லட்சம் வாக்குகள் பெற்ற மாயத்தேவர், 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அடுத்த இடத்தை 1.20 லட்சம் வாக்குகளுடன் காங்கிரஸ் பிடித்தது. 1971 பொதுத் தேர்தலில் 2.48 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக, இடைத் தேர்தலில் 85 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது.

5 முறை போட்டியிட்டு 3ல் வெற்றி:

அதனைத் தொடர்ந்து 1977-ல், 2ஆவது முறையாக திண்டுக்கல் தொகுதியில் வெற்றிப் பெற்ற மாயத்தேவர், எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். 1980-ல் திமுக சார்பில் போட்டியிட்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 3ஆவது முறையாக வெற்றிப் பெற்றார். பின்னர், 1984 மற்றும் 1991 மக்களவைத் தேர்தல்களில் திமுக சார்பில் களம் இறங்கியபோதும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.

2016-ல் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் மாதம் தினமணிக்கு பிரத்யேக பேட்டி அளித்த கே.மாயத்தேவர், 1972 இடைத் தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:

அதிமுக தேர்தலில் போட்டியிடுவது என உறுதியானதும், வேட்பாளர் தேர்வு குறித்து எம்ஜிஆர் ஆலோசித்தார். நான்(மாயத்தேவர்) போட்டியிடுவதற்கு எம்ஜிஆர் முடிவு செய்தபோது, சேடபட்டி முத்தையா, எஸ்.டி.சோமசுந்தரம், காளிமுத்து ஆகியோர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, என்னை வேட்பாளராக அறிவித்த எம்ஜிஆர், அப்போதே வெற்றி மாலையையும் அணிவித்து வாழ்த்தினார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்தபின், திண்டுக்கல் தொகுதிக்குள்பட்ட ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் பகுதியில் எம்ஜிஆர் பிரச்சாரம் மேற்கொண்டார். கிராமப்புறங்களுக்கு செல்லும்போது, குடிசைகளுக்கு சென்று தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். இதனால், பெண்கள் மத்தியில் எம்ஜிஆரின் செல்வாக்கு உச்சத்தை தொட்டது.

வெற்றிப் பெற்றவுடன், மனைவி சரஸ்வதி, பச்சிளம் குழந்தையான எனது மகனையும் அழைத்துச் சென்று எம்ஜிஆரை சந்தித்தேன். அப்போது எனது மகனுக்கு வெற்றித் தமிழன் என பெயரிட்ட எம்ஜிஆர், என்னை ஆரத் தழுவிக்கொண்டு வாழ்த்தியது இன்றும் பசுமையாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com