இரட்டை இலையைத் தெரிவு செய்த மாயத் தேவர்!

யார் இந்த மாயத் தேவர்?
இரட்டை இலையைத் தெரிவு செய்த மாயத் தேவர்!
Published on
Updated on
1 min read

அதிமுக தலைவரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலம் வரை தோற்கடிக்கப்பட முடியாத சின்னம் எனப்பட்ட சுயேச்சை சின்னமாக இருந்த இரட்டை இலையை அதிமுகவுக்காகத் தேர்ந்தெடுத்தவர் இந்த மாயத்தேவர்தான்!

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அதிமுகவைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே திமுக எம்.பி.யான ராஜாங்கத்தின் மறைவு காரணமாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடைதேர்தல் வந்தது.

1973 மே 10 ஆம் தேதி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏற்கெனவே வழக்கறிஞராக எம்.ஜி.ஆருடன் அறிமுகம் ஆகியிருந்த மாயத் தேவர் தெரிவு செய்யப்பட்டார்.

எந்தத் தேர்தலையும் சந்தித்திராத அதிமுகவுக்கு சுயேச்சை சின்னம்தான். விளக்கு சின்னத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால், மாயத்தேவரோ வேட்பாளர் என்ற முறையில் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். வெற்றியின் சின்னம், வின்ஸ்டன் சர்ச்சிலைப் போல வெற்றிக்கு அறிகுறியாக இரு விரல்களைக் காட்டி எளிதில் மக்களிடம் கொண்டுசென்று வெற்றி பெற முடியும் என்றெல்லாம் எம்ஜிஆரிடம் விளக்கினார்.

கணித்தபடியே இரட்டை இலைச் சின்னம் வென்றது. அதிமுக சார்பில் முதன்முதலாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. மாயத் தேவர்.

அன்றைய மதுரை மாவட்டத்திலுள்ள டி. உச்சப்பட்டியில் பி. கருப்பத் தேவரின் மகனாகப் (1934 அக். 15) பிறந்தவர் மாயத் தேவர். உசிலம்பட்டி உயர்நிலைப் பள்ளியிலும் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி, சென்னை பச்சையப்பா கல்லூரி, தொடர்ந்து சட்டக் கல்லூரியின் பயின்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1967 வரையிலும் பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்த மாயத் தேவர், அதிமுக தொடங்கப்பட்டதும் அதிமுகவில் இணைந்தார். முதுமை காரணமாக அண்மைக் காலமாக அரசியலிலிருந்து சற்று ஒதுங்கி, திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் வசித்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com