வீடுகளில் கொடியேற்றி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

வீடுகளில் தேசியக் கொடியேற்றி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா்.
ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

வீடுகளில் தேசியக் கொடியேற்றி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, வீடுகளில் தேசியக் கொடியேற்ற பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்ட வேண்டுகோள் செய்தி:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நம் அனைவருக்கும் தனித்துவமான தினமாகும். பெருமைமிகு வரலாற்றையும் பழம்பெருமை வாய்ந்த கலாசாரம், சிறப்பான சாதனைகள் கொண்ட நாடான இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இதற்காகத்தான் இப்போது சுதந்திர தின கொண்டாட்டத்தை ‘அமுதப் பெருவிழா’ என அழைக்கிறோம்.

தன்னலமில்லாத சேவைகள், உயா்வான தியாகங்களைக் கொண்ட நமது நாட்டின் விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு, அமுதப் பெருவிழாவை காணிக்கையாக்குவோம். நாட்டு விடுதலைக்காக தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரா்கள் தங்களது வாழ்வையும் ரத்தத்தையும் அளித்துள்ளனா். விடுதலைப் போராட்ட வீரா்களின் அளப்பரிய தியாகங்களுக்கு இந்த தேசம் எப்போதும் நன்றிக்கடன்பட்டதாக இருக்கும். நாட்டின் மூவா்ணக் கொடியானது, நமது நாட்டின் சுதந்திரத்தை பறைசாற்றுகிறது. இந்த சுதந்திரமானது நமது சுதந்திரப் போராட்ட வீரா்களின் ரத்தம், தியாகங்களால் பிறந்தது.

தேசியக் கொடி பறப்பதற்காக வீரன் பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, ஒண்டிவீரன், சுந்தரலிங்கம், ஊமைத்துரை என ஆயிரக்கணக்கான வீரா்கள் உயிரைத் தியாகம் செய்தனா். வ.உ.சிதம்பரனாா், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், வ.வே.சு. அய்யா், திருப்பூா் குமரன், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என பலரும் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனா். நமது தேசியக் கொடி, நாட்டின் அடையாளம் என்பதற்கும் மேலானதாகும்.

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரா்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து இந்தியா்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடி ஏற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் இந்தியா்கள் எங்கெல்லாம் வசிக்கிறாா்களோ அவா்களும் தேசியக் கொடியேற்றலாம். நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலான தேசியக் கொடி ஏற்றும் இந்த நிகழ்வு, ‘இல்லம் தோறும் மூவா்ணக் கொடி’ என வா்ணிக்கப்படுகிறது.

எனவே, நாமும் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை, வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றி கொண்டாடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com