சிவகளை அகழாய்வுப் பணியில் தங்கம் கண்டெடுப்பு!

சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
சிவகளை அகழாய்வுப் பணியில் தங்கம் கண்டெடுப்பு!
Published on
Updated on
1 min read

சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் பல்வேறு பழங்கால பொருள்கள் கண்டறிந்து, அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.

முதற்கட்ட அகழாய்வில் 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம்கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் கிடத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமாா் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கியது. ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடப் பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில், வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்ளி, முத்திரைகள், எலும்பாலான கூா்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது, அங்கு தங்கத்தால் ஆன சிறிய பொருள்கள், மண்ணால் ஆன் பொருள்கள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட  நிலையில், முதன் முறையாக தங்கத்தால் ஆன பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்களை கண்டறியும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com