முகச் சிதைவு நோயால் சிறுமி அவதி: மயக்கவியல்துறை மருத்துவர்கள் பரிசோதனை

ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் 9 வயது சிறுமியை, மயக்கவியல்துறை மருத்துவர்கள் இன்று பரிசோதனை செய்தனர். 
மயக்கவியல்துறை மருத்துவர்கள் பரிசோதனை (கோப்பிலிருந்து)
மயக்கவியல்துறை மருத்துவர்கள் பரிசோதனை (கோப்பிலிருந்து)


சென்னை: ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் 9 வயது சிறுமியை, மயக்கவியல்துறை மருத்துவர்கள் இன்று பரிசோதனை செய்தனர். 

சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரும் 23ஆம் தேதி சிறுமிக்கு அறுவைசிகிச்சை நடைபெறவிருக்கும் நிலையில், இன்று அவரை மயக்கவியல்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் 9 வயது சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆவடியை அடுத்த வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-செளபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகள் டானியா (9). இவர் முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை.

இதையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து வந்தனர். எனினும், டானியாவுக்கு அரிய வகை நோய் குணமாகவில்லை. நாள்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.

இதுகுறித்து டானியாவின் பெற்றோர் கூறியது: எனது மகளின் அரிய வகை நோய்க்கு இதுவரை ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவானது. தற்போது முக அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லை. எனது மகளின் அறுவை சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் ஜவகர் தலைமையில் மருத்துவக் குழுவினர் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, புதன்கிழமை இரவு சிறுமி டானியாவை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com