இபிஎஸ்ஸுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, அவருடைய குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்த டிடிவி தினகரன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கருத்தை வரவேற்கிறேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான் தற்போதைய திமுக அரசை அகற்ற முடியும்.
அதேநேரத்தில் துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்த வேண்டும். அவர்கள் திருந்தினால்தான் மற்றவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். யாரும் யாருடனும் செல்லத் தேவையில்லை. ஓபிஎஸ் சொன்னதுபோல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதுமானது.
எங்களுக்கு யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியுடனும் கருத்து வேறுபாடு இல்லை. அவரின் குணாதிசயங்களைத் தான் நான் கண்டிக்கிறேன்.
மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
எந்த தவறு செய்தாலும் மன்னிக்கலாம். ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தீர்ப்பளிப்பார்கள். நம்பிக்கை துரோகம் என்பது அருவறுக்கத்தக்கது.