மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

ரெளடி ராஜாவின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு

பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய ரௌடி ராஜாவுக்கு கும்பகோணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
Published on

பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய ரௌடி ராஜாவுக்கு கும்பகோணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

மேலும், ரெளடி ராஜாவின் கூட்டாளிகளான ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகியோரின் ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திப்பிராஜபுரத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் செந்தில்நாதன் (23). பணம் கொடுக்கல் - வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இவரை, இவரது நண்பரான திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த எம். ராஜா என்கிற கட்டை ராஜா (43) உள்ளிட்டோா் 2013, ஜூன் 18ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து பட்டீசுவரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராஜா, இவரது தாய்மாமன்களான திப்பிராஜபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், மனோகரன், மைத்துனா் மாரியப்பன், தம்பி செல்வம் ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களில் ராஜா மீது ஏற்கெனவே 10 கொலை வழக்குகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்குத் தொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, மாரியப்பன், மனோகரன் இறந்துவிட்டனா்.

இந்த வழக்கில், ராஜாவுக்கு மரண தண்டனையும், ஆறுமுகம், செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 12,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்வதற்காக கீழமை நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வில் விசாரணை செய்யபட்டது.

கட்டை ராஜாவுக்கு விதிக்கபட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com