தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் - சீமான்  வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது எவ்விதக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாதென திமுக அரசு கைவிரித்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல்துறையினரால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்து, சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்தும் அதனைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடியில் மண்ணின் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசப்பயங்கரவாதத்தை, 14 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமான கொடுஞ்செயலைக் கொலைக்குற்றமெனக் கருதி, அதனைச் செய்த காவல்துறையினர் மீதும், காரணமான அதிகார வர்க்கத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்காது, விதிமீறல் போலக் கருதித் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையோடு நிறுத்திக்கொண்ட திமுக அரசின் போக்கு வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். படுகொலைக்கு சாட்சிகளும், ஆவணங்களும் இருந்தும்கூட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் திமுக அரசின் செயல்பாடு மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

போராட்டத்தின்போது மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாகவே மக்கள் நின்றார்கள் என்பதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்று குவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளித்திருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம். 

ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைப் படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் திமுக அரசு வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com