டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்காவது அரது வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
பாமக நிறுவனர்  ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்
Published on
Updated on
2 min read


 
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள  வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படவுள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, அடுத்த ஆண்டில் மொத்தம்  11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் நான்காம் தொகுதி தேர்வுகளின் மூலம் எத்தனை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டு நவம்பரில் தான் அந்த விவரம் வெளியாகக்கூடும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம். இவர்களில் 18 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகம். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம் ஆகும். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.

அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசு பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டில் 8,000 பேருக்கு கூட வேலை வழங்க வாய்ப்பில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறைந்தது 60,000 பேராவது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் ஓரளவாவது நியாயமாக இருக்கும்.

ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தேர்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தேர்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது. 2022-ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டில் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகளை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல.

மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வுகள், கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தொகுதி 3ஏ தேர்வுகள் ஆகியவை அடுத்த ஆண்டு நடத்தப் படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முதல் தொகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர்  வயது வரம்பைக் கடந்து அரசு பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது  தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகள் அடிப்படையில் வேலை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப் படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com