டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர்; நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என பெயர் சூட்டப்பட்டது. மேலும், அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர்; நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு
Published on
Updated on
2 min read

தமிழக பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என பெயர் சூட்டப்பட்டது. மேலும், அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முன்னாள் அமைச்சரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா (101-வது பிறந்தநாள்) இன்று (டிச.19) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து திமுக சார்பிலும் அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதையொட்டி, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை அறிவாலயத்தில் உள்ள அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு முதல்வரும், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்துக்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என பெயர் சூட்டப்பட்டது.

மேலும் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். 

அன்பழகன், தமிழகத்தின் முன்னாள் கல்வித்துறை அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (19.12.2022) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.ஐ. வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்று 30.11.2022 அன்று முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையினை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதல்வர் திறந்து வைத்தார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அன்பழகன் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com