உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் பற்றிய முழுவிவரம்

வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.
உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் பற்றிய முழுவிவரம்
Published on
Updated on
2 min read

பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.

உழவன் செயலியின் நோக்கம் :
பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு,
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும்
தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள
வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் கைபேசி மூலமாக வழங்குவதே உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.

உழவன் செயலியின் சிறப்பம்சங்கள் :

கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி புதுப்பிக்கப்பட்டு, தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள்

1. மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.

2.இடுபொருள் முன்பதிவு: வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.

3. பயிர் காப்பீடு விபரம்: அறிவிக்கப்பட்ட (Notified) கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள்.

4. உரங்கள் இருப்பு நிலை: தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள இரசாயன உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள்.

5. விதை இருப்பு நிலை: வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்கில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு.

6. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு: வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை, வாடகை முன் பதிவு பற்றிய விவரங்கள்.

7. சந்தை விலை நிலவரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை.
8. வானிலை அறிவுரைகள்: மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு.

9. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்: உங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் உதவி வேளாண்மை/தோட்டக்கலை அலுவலர்களின் பெயர், கைபேசி எண், போன்ற விவரங்கள்.

10. அணை நீர்மட்டம்: தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர்
நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவின் உள்ள நான்கு முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு.

11. வேளாண் செய்திகள்: வேளாண்மை தொடர்பான அறிவிப்புகள், துறையின் பத்திரிக்கை வெளியீடு, தொழில்நுட்பங்கள், விலை முன்னறிவிப்புகள்.

12. கருத்துக்கள்: திட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

13. என் பண்ணை வழிகாட்டி: வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள்.

14. இயற்கை பண்ணை பொருட்கள்: அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சான்றளிப்பு முகமைகள் பற்றிய விவரங்கள்.

15. FPO தயாரிப்புகள்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவரங்கள், அவர்களின்

தயாரிப்புகள் பற்றிய தகவல்கள்.

16. பூச்சி/நோய் கண்காணிப்பு/ பரிந்துரை: பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகள்.

17. ATMA பயிற்சி மற்றும் செயல்விளக்கம்: அட்மாத் திட்டத்தில் வேளாண் செயல்விளக்கம், கல்விச் சுற்றுலா போன்ற வேளாண் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு.

18. உழவன் இ-சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்கள்.

19. பட்டுப்புழு வளர்ப்புத் துறை: பட்டுக்கூடு கிடைக்கும் இடம், சந்தை விலை மற்றும் பட்டு வளர்ப்புத் துறை தொடர்பான திட்ட விவரங்கள்.

20. வேளாண் பட்ஜெட் 2022-23: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான விபரங்கள்.

21. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற பதிவு செய்து கொள்வதற்கான வழி வகை.

22. கால்நடை மருத்துவர்: தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்

உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேளாண் பெருமக்களுக்கு வேண்டிய விபரங்களை விரைவாக வழங்கி, விவசாயிகளின் தினசரி வாழ்க்கையினை மிகவும் எளிதாக்கி, விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியினை இதுவரை பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com