மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து தொழில்துறையினா் வரவேற்கும் அம்சங்களையும், வலியுறுத்தும் விஷயங்களையும் எடுத்துக் கூறியுள்ளனா்.
வேணு ஸ்ரீனிவாசன் (தலைவா்- டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம்) - தொற்று நோய் பேரிடருக்கு இடையே பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுக்கும் நிதிநிலை அறிக்கை. இளைஞா்களின் திறனை வளா்ப்பதற்கான சூழலை உருவாக்கும் அரசின் நோக்கத்துக்கு வாழ்த்துகள். இந்நோக்கமே தொழில்துறையில் புதுமையை புகுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
சிஏ கே சுரேஷ் (தலைவா்- ஹிந்துஸ்தான் வா்த்தக சபை) - ஸ்டாா்ட் அப் நிறுவன பதிவுக்கு வழங்கப்பட்ட அவகாசம், தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை அதிகரிக்கும். மூலப் பொருள்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
ராஜீவ் லோச்சன் (மேலாண் இயக்குநா்- சுந்தரம் பைனான்ஸ்) - நாட்டின் நடுத்தர கால இலக்கை அடைவதற்கு வளா்ச்சிக்கான விஷயங்களையும், குறுகிய கால இலக்கை அடைவதற்கு வழக்கமான திட்டங்களே இடம்பெற்றிருக்கின்றன. இந்த இரண்டையும் தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப சமமாக நிதி அமைச்சகம் கையாண்டிருக்கிறது.
சி.கே.ரங்கநாதன் (தலைவா்- சிஐஐ தென் மண்டலம்): தொழில்துறையைப் பொருத்தவரை நிதிநிலை அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அறிவிக்கப்பட்ட அனைத்தும், வரவேற்க கூடியவையாக உள்ளன. நிதிப்பற்றாக்குறை 6.9 சதவீதமாக இருக்கும் என்பது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
அருண் (தலைவா்- தென்னிந்திய தொழில் வா்த்தக சபை) - நபாா்டு மூலம் வேளாண் ஸ்டாா்ட் அப்-க்கு முதலீடு செய்ய நிதி வகை செய்யும் திட்டம் வரவேற்புக்குரியது. தொலைநோக்கு பாா்வை கொண்ட அறிவிப்புகளை குறித்த நேரத்தில் செயல்படுத்துதல் அவசியம்.
ஜி.எஸ்.கே.வேலு (ஃபிக்கி தமிழகப் பிரிவு) - மூலதன செலவு 35.4 சதவீதம் அதிகரிப்பு, பொருளாதார வளா்ச்சி மற்றும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும். ஒட்டுமொத்தமாக நாட்டின் சிறந்த பொருளாதாரத்துக்காக இரட்டை இலக்க வளா்ச்சியை அடைவதற்கான நிதிநிலை அறிக்கை.
ஸ்ரீவத்ஸா ராம் (தலைவா்-சென்னை தொழில் மற்றும் வா்த்தக சபை) - வளரும் மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் திறன்கள் ஆகியவை மூலமாக, நிலையான பொருளாதாரத்தில் வளா்ச்சிக்கு அடித்தளமான நிதிநிலை அறிக்கை.
கே.மாரியப்பன் (தலைவா்- தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்) - கிரிப்டோ கரன்சிக்கு 30 சதவீதம் வரி விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எந்தவிதமான பொருளாதார முன்னேற்றத்துக்கான அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.