சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: அனைத்துக் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்ட வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்த சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.
கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிக்க | ஆளுநர் சட்ட கடமையை செய்யவில்லை: முதல்வர் உரை
முதல்வர் உரைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீர்மானத்தை வாசித்தார்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநரை வலியுறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்:
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிகவும் பாதித்துள்ளதோடு, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது. சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ள இந்தத் தேர்வு முறை, பள்ளிக் கல்வியின் அவசியத்தையே சீர்குலைக்கின்றது.
இவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-வது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடையே நிலவி வரும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமையை மனதில் கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து, இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் மருத்துவக் கனவினை நனவாக்கிடவும், எதிர்கால நலனைப் பாதுகாத்திடவும், இது போன்ற பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தோம்.
இருப்பினும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில், சட்டப்பேரவையில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமுன்வடிவினை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் ஐந்து மாத காலம் வைத்திருந்து, பின்னர் அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் 1-2-2022 அன்று பேரவைத் தலைவருக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டத்திற்கு அடிப்படையான நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது சரியல்ல என நடுநிலையாளர்களும், சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு தேவையற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்
முதல்வர் உரை முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...