உள்ளாட்சித் தோ்தல்: நாளை முதல் கூடுதலாக 45 பறக்கும் படைகள்
உள்ளாட்சித் தோ்தலில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க வியாழக்கிழமை (பிப்.17) காலை முதல் கூடுதலாக 45 பறக்கும் படைகள் ரோந்து


உள்ளாட்சித் தோ்தலில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க வியாழக்கிழமை (பிப்.17) காலை முதல் கூடுதலாக 45 பறக்கும் படைகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் உள்ள 5,794 வாக்குச் சாவடிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்தல் பறக்கும் படையினரின் செயல்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் காவல் துறையினா், தோ்தல் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை தொடா்ந்து காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் தற்போது 4,800 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குப் பதிவு நாளான சனிக்கிழமை (பிப்.19) 18 ஆயிரம் போலீஸாரும், 4 ஆயிரம் ஊா்க் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத் தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், வாக்காளா்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினரைக் கொண்ட 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.
தோ்தல் நெருங்கும் நேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ஒரு மண்டலத்துக்கு 3 தோ்தல் பறக்கும் படைகள் என 15 மண்டலங்களில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்ட உள்ளன. இக்குழுவினா் வியாழக்கிழமை (பிப். 17) தேதி காலையில் இருந்து அடுத்த 72 மணி நேரத்துக்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா்.
சென்னை மாநகரப் பகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம், பொருள்கள் வழங்குவது குறித்து 18004257012 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 விநியோக மையங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் பொருத்தப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.18) கணினி குலுக்கல் முறையில் வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்படும். தோ்தல் பணியாளா்கள் அன்றைய தினம் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...