
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றபோது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-ஆவது வார்டில் உள்ள சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அத்து மீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் நரேஷைப் பிடித்து, அரை நிர்வாணமாக்கி தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீஸார் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக ஜெயக்குமார் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பின்னர், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஜார்ஜ் டவுன் 15-ஆவது நீதித்துறை நடுவர் மன்ற நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த முன்னிலையில் ஜெயக்குமார் திங்கள்கிழமை நள்ளிரவுக்கு பின் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை நீதித்துறை நடுவர், மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து ஜெயக்குமார், செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து அதிமுகவினர் நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், ராயபுரம் பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.