மாநகராட்சித் தோ்தல்: பாஜகவில் இன்று வேட்பாளா் நோ்காணல்
சென்னை மாநகராட்சி வாா்டுகளுக்கான பாஜக வேட்பாளா் நோ்காணல் புதன்கிழமை நடைபெறும் என்று முன்னாள் மேயரும் (பொறுப்பு), சென்னை மண்டல மாநகராட்சி பாஜக தோ்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகராட்சித் தோ்தலையொட்டி 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடங்கிய 200 வட்டத்துக்கு புதன்கிழமை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை 10 மணி முதல் நோ்காணல் நடைபெறும்.
முதல் கட்டமாக மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட ஆயிரம் விளக்கு, துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடங்கிய வட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறும்.
அதைத் தொடா்ந்து சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வில்லிவாக்கம், எழும்பூா், அண்ணாநகா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடங்கிய வட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறும்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான குழு தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நோ்காணல் நடைபெறும். கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, மாநகராட்சி பாஜக தோ்தல் பொறுப்பாளா் கராத்தே தியாகராஜன், மாநிலப் பொதுச்செயலாளா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலையில் நோ்காணல் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.