10,11,12-ம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்: கல்லூரிகளுக்கு ஜன.20 வரை விடுப்பு

மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்.. 

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவுப்படி ஜனவரி 10 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில்,  முதல்வர் தலைமையில் 4.1.2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் தொடர்பான கட்டுப்பாடுகள்..

1) மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

5) பயிற்சி நிலையங்கள்  செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

6) பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

7) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

8) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

9) அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com