மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்

சென்னையில் மிக அதிக மக்கள் தொகை மற்றும் மக்கள் நெருக்கமாக வாழும் மண்டலமான ராயபுரம், மீண்டும் சென்னையின் கரோனா அபாயப் பகுதியாக மாறி வருகிறது.
மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்
மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்


சென்னை: சென்னையில் மிக அதிக மக்கள் தொகை மற்றும் மக்கள் நெருக்கமாக வாழும் மண்டலமான ராயபுரம், மீண்டும் சென்னையின் கரோனா அபாயப் பகுதியாக மாறி வருகிறது.

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் சாலைகளின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 15 சாலைகளுடன் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 5593 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக அடையாறில் 718 பேரும், தேனாம்பேட்டையில் 702 பேரும், கோடம்பாக்கத்தில் 646 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ராயபுரத்தில் 556 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியலில், ராயபுரத்தில்தான் அதிகமான சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் மண்டலம் என்பதால், அங்குப் பணியாற்றும் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வசிப்பிடமாகவும் ராயபுரம் விளங்குகிறது.

இதுவும், ராயபுரத்தில் அதிக கரோனா நோயாளிகள் பதிவாக ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதாவது, ராயபுரத்தில் உள்ள செவிலியர் விடுதியில் 10 - 13 செவிலியர்களுக்கும், பல் மருத்துவ விடுதியில் ஒருவருக்கும், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள், கரோனா பாதிக்கப்பட அதிக அபாயம் கொண்டவர்களாகவும், முதலில் பாதிக்கப்படும் நபர்களாகவும் இருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பதால், யாருக்கும் பெரிய அளவில் உடல்நலப் பாதிப்பு இல்லை என்றும் தகவல்கள் உறுதி செய்துள்ளன. 

பெரும்பாலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டால் அனைவருக்குமே கரோனா உறுதி செய்யப்படுவது தற்போது நிகழ்வதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும் பரிசோதனை செய்ததில் அனைவருக்கும் கரோனா பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

திங்கள்கிழமை நிலவரப்படி, சென்னையில் மட்டும் 1158 சாலைகள், ஒரு கரோனா நோயாளிகளாவது இருக்கும் சாலைகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு வாரத்துக்கு முன்பு பார்த்தால், வெறும் பாதி எண்ணிக்கையில்தான் இருந்தது என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com