மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வாழப்பாடி: வங்காநரி முகத்தில் விழித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய கிராம மக்கள்

சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறைப்படி, வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

News image

சின்னமநாயக்கன்பாளையத்தில் வங்காநரியை ஊர்வலமாக கொண்டு சென்ற கிராம மக்கள்.

Updated On :17 ஜனவரி 2022, 9:48 am

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறைப்படி, வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொங்கல் பண்டிகையை ஆரவாரமாகக் கொண்டாடி திங்கள்கிழமை நிறைவு செய்தனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுார், மத்துார், பெரியகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், மார்கழி மாதத்தில் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய சாகுபடி செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற  நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.

இதனால், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சென்று, கோவில் வளாகத்தில் ஓட விட்டு பொதுமக்களுக்கு காண்பித்த பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Story image

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. தடைமீறியை வங்காநரி நடத்தினால், கடந்த சில ஆண்டாக வனத்துறை அபராதம் விதித்து வருகிறது. ஆனாலும் இந்த பாரம்பரிய நிகழ்வை கைவிட மனமில்லாத கிராம மக்கள், வங்காநரியை பிடித்து காணும் பொங்கல் தினத்தன்று கிராமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வந்து மக்களுக்கு காண்பித்து விட்டு, வனத்துறையினரிடம் நரியை ஒப்படைப்பதோடு, அபராதமும் செலுத்தி வருகின்றனர். 

நிகழாண்டு காணும் பொங்கல் தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால், சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள், திங்கள்கிழமை காலை வங்காநரி பிடித்து மேள வாத்தியம் முழங்க கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காண்பித்து விட்டு, இந்த நரியை மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டனர். இதன்பிறகு, எருதாட்டம், விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனர்.

இருப்பினும், வனத்துறை தடையை மீறி வங்காநரி பிடித்ததால், இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

‘கிராமப்புற தரிசு நிலங்களில் சுற்றித்திரியும் வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், காணும் பொங்கலன்று மக்களுக்கு காண்பித்து விட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடும், இந்த பாரம்பரியமிக்க சடங்கு தொடர்வதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். வனத்துறை அபாரதம் விதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சின்னமநாயக்கன்பாளையத்தில் வங்காநரியை ஊர்வலமாகக் கொண்டு சென்ற கிராம மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.